09மாதங்களில் மட்டும் 6,063 சிறுவர் முறைப்பாடுகள்

pg01 GL
pg01 GL

இவ்வருடம் ஜனவரி தொடக்கம் செப்டெம்பர் வரையான 9 மாதங்களில் மட்டும் 6 ஆயிரத்து 63 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதில் 3 ஆயிரத்து 900 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளன.”என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போது, ஜே.வி.பி. எம்.பி. ஹரினி பாலசூரியவினால் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட  கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த  கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மேலும் கூறுகையில்,

“2020 ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் 23ஆம் திகதி வரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 6 ஆயிரத்து 63 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அம்முறைப்பாடுகளில் 3 ஆயிரத்து 900 விசாரணைகள் நிறைவுபெற்றிருக்கின்றன. விசாரணை நிறைவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 330 முறைப்பாடுகளுக்கு குற்றப்பத்திரம் தாக்கல்  செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் நாம் திருப்தி அடைய முடியாது.

எனவே, சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான  விசாரணை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த 9 மாகாணங்களுக்கும் 9 சிறுவர் நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

தற்போது பத்தரமுல்லை மற்றும் யாழ்ப்பாணத்தில் மாத்திரமே சிறுவர் நீதிமன்றங்கள் உள்ளன. அதேபோன்று சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகளை விசாரணை செய்யும் பொலிஸாருக்கு முறையான பயிற்சி வழங்கவும், பொலிஸ் நிலையங்களுக்கு வரும் முறைப்பாடுகளில் ஆரம்ப விசாரணையை 24 மணி நேரத்தில் விசாரித்து அதிகார சபைக்கு அறிக்கையிடவும் நடவடிக்கை  எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, முறைப்பாடுகளுடன் தொடர்புடைய பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களில் 5 ஆயிரத்து 667 பேர் தமது குடும்பங்களுடன் இருப்பதுடன் 396 பேர் தமது குடும்பங்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு விலக்கி வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள், தங்களுக்கு நம்பிக்கையான உறவினர்களுடனும் சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்