ரணில், மைத்திரி ஆட்சியில் இருந்திருந்தால் போரை முடிவுக்குக் கொண்டுவந்திருக்க முடியாமல் போயிருக்கும் -பொன்சேகா

sarath
sarath

இலங்கையில் போர் முடிவுக்குவர இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் சீனா சென்றது உண்மையே என்றும், அங்கிருந்தபடியே போர் நகர்வுகளை முன்னெடுத்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சர்வதேச உடன்படிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, போர் முடிவுக்கு வரும் வேளையில் சரத் பொன்சேகா சீனாவிலேயே இருந்தார் என்று தெரிவித்திருந்தார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய சரத் பொன்சேகா, போர் முடிவுக்கு வர இரண்டு வாரங்களே இருந்தபோது கீழ்மட்ட அதிகாரிகளின் பணிகள் மட்டுமே அவசியம் என்ற நிலைப்பாடு இருந்தது என்று கூறினார்.

அப்போது இராணுவத்துக்கு போர்த் தாங்கியொன்று தேவைப்பட்டது எனவும், அதனைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதால், அதனைப் பெறுவதற்காக தாம் நேரடியாகவே சீனாவுக்குச் செல்ல நேரிட்டதாகவும் அவர் பொன்சேகா குறிப்பிட்டார்.

“குறித்த தினத்துக்குள் வராவிட்டால் போர்த் தாங்கிகள் எமக்கு வழங்கப்படாது எனக் கூறினார்கள். அதற்காகவே நான் அங்கு (சீனா) சென்றேன்” என்றார் பொன்சேகா.

“ரணில், மைத்திரி போன்றவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் எம்மால் போரை முடிவுக்குக் கொண்டுவந்திருக்க முடியாது. அதனை நான் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளேன்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.