பாராளுமன்ற அமர்வுகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

unnamed 1 4
unnamed 1 4

பாராளுமன்ற அமர்வுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்குப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

வழமைபோன்று பாராளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான 3 ஒழுங்குவிதிகளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. அன்றையதினம் பிற்பகல் 4.30 முதல் 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.

ஒக்டோபர் 21ஆம் திகதி மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அன்றையதினம் பிற்பகல் 4.30 மணிக்கு 5.30 எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை விவாதம் நடைபெறும்.

ஒக்டோபர் 22ஆம் திகதி முற்பகல் 10 மணி முதல் 4.30 மணிவரை ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் தற்போதைய சுகாதார நிலைமைகள் பற்றி சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.

அத்துடன்,இன்று முன்னெடுக்கப்படவிருந்த மறைந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களான அமரர் சுரங்கனி எல்லாவல, அமரர் ஆர்.ஆர்.டபிள்யூ.ராஜபக்ஷ அமரர் கே.பி.சில்வா ஆகியோர் குறித்த அனுதாபப் பிரேரணைகளை எதிர்வரும் 23ஆம் திகதி முன்னெடுப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டது.

ஒருவேளை, 20வது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகரின் ஊடாக சபைக்கு அறிவிக்கப்பட்டால் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவை மீண்டும் கூட்டி, 20வது திருத்தத்தை விவாதிக்கும் வகையில் தற்பொழுது தீர்மானிக்கப்பட்டுள்ள விடயங்களில் மாற்றம் செய்வதற்கும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.