மன்னாரில் பல இலட்சம் ரூபாய் கேரள கஞ்சா மற்றும் மஞ்சள் கட்டி மூடைகள் மீட்பு!

மன்னார் மாவட்டத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மற்றும் மஞ்சள் கட்டி மூடைகளை பொலிஸார் கைப்பற்றியதுடன், சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (9) மன்னார் – வங்காலை கடற்கரையோர பகுதியில் பதுக்கி வைத்திருந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

புலனாய்வுத் துறையினரின் இரகசிய தகவல்களுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன் தலைமையில் சென்ற விசேட பொலிஸ் குழுவினர் குறித்த கடற்கரையோர பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 125 கிலோ 800 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் ஒரு கோடி 25 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வந்துள்ளது.

மீட்கப்பட்ட பொதிகள் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி மஞ்சள் கட்டி மூடைகளை நேற்று (9) மாலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு உபபொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் பருத்திப்பண்னை பகுதியில் உள்ள வீட்டின் சமையல் அறையில் பதுக்கி வைத்திருந்த 154 கிலோ 500 கிராம் எடை கொண்ட மஞ்சள் கட்டி மூடைகளை கைப்பற்றியுள்ளதோடு அங்கிருந்து 2,250 மில்லி கிராம் கேரள கஞ்சாவினையும் மீட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூடைகள் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட உள்ளதோடு, குறித்த நபர் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவுள்ளார்.

இதே வேளை வங்காலை நானாட்டான் பிரதான வீதி,நருவிலிக்குளம் ஆயுர் வேத வைத்தியசாலைக்கு பின் பகுதியில் வைத்து நேற்று (9) இரவு 11.30 மணியளவில் 33 கிலோ 650 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் இரண்டு சந்தேக நபர்களை வங்காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வங்காலை பொலிஸ் நிலைய உபபொலிஸ் பரிசோதகர் பியல் தலைமையிலான பொலிஸ் குழுவினரே குறித்த கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளதோடு,29 மற்றும் 36 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.