ரிஷாட் பதியூதினை கைது செய்வது தொடர்பில் அஜித் ரோஹண வெளியிட்டுள்ள விடயம் !

DIG Ajith Rohana 2020
DIG Ajith Rohana 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாட் பதியூதீனை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆறு குழுக்கள் அவரின் இல்லத்திற்கு அனுப்பிவைக்க்பபட்டுள்ளதாக, காவல்துறை பேச்சாளரான, பிரதிக் காவல்துறைமாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூனின், மன்னார் மற்றும் கொழும்பிலுள்ள இல்லங்களுக்கு இந்த ஆறு குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, புத்தளத்தில் இருந்து மன்னார் வரையில் இலங்கை பேருந்து சேவைக்கு சொந்தமான பேருந்துகளில் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு போக்குவரத்து சேவையை வழங்கியதன் மூலம், பொதுச் சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறியமை முதலான குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

இதன்படி, பிடியாணையை பெற்று அவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் காவற்துறை மா அதிபருக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில் பிடியாணை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தனர்.

இதன்போது, குறித்த கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான் ப்ரியன்த லியனகே, பொது சொத்து சட்டத்தின் குற்றச்சாட்டின் கீழ் எவரையும் கைது செய்ய பிடியாணை அவசியமில்லை என குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தின் இந்த அறிவித்தலின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீனை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் காவற்துறைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.