ஆரம்பித்து வைக்கப்பட்ட நந்திக்கடல் களப்பு சுத்தப்படுத்தல் செயற்றிட்டம்!

mul 14 10 2
mul 14 10 2

கடல் நீரேரி பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி செயற்றிட்டம் 2020இன் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் களப்பினருகிலுள்ள வட்டுவாகல் பாலத்தின் கீழ் நீரோட்டத்திற்கு தடையாக உள்ள கற்களை அகற்றி சுத்தப்படுத்தல் செயற்றிட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களினால் இன்று(14) புதன்கிழமை பி.ப2.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சின் இரண்டு இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வட்டுவாகல் கிராமிய கடற்றொழில் கூட்டுறவுச்சங்கத்தின் தலைமையில் செல்வபுரம் மற்றும் கோயிற்குடியிருப்பு ஆகிய கிராமிய கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்கள் இவ் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளன.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் இச் செயற்றிட்டத்தின் மூலம் பாலத்தின் நான்கு வடிகால்களினூடான நீர்ப் போக்குவரத்துக்கு தடையாக உள்ள கழிவுப்பொருட்கள் குறிப்பாக தேவையற்ற கற்கள் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்றப்பட்டு சுத்தமாக்கப்படுவதனூடாக மீன்பிடிக்கைத்தொழில் மேம்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட பொறியியலாளர், கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்கள மாவட்ட உதவிப்பணிப்பாளர், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள மாவட்ட உதவிப்பணிப்பாளர், குறித்த திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமிய கடற்றொழில் கூட்டுறவுச்சங்க அங்கத்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.