வெடுக்குநாறி ஆலய வழிபாட்டு தடைக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல்!

வவுனியா வடக்கு – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் விரைவில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆலய வழிபாட்டிற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளமை தொடர்பாக, ஆலய நிர்வாகத்தினரை, வவுனியாவில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில், சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அடியவர்கள் சென்று வழிபடுவதற்கு நெடுங்கேணி காவல்துறையினர் தடைவிதித்து வருகின்றனர்.

ஆலயத்தில் பூசை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. அந்த ஆலயத்தின் பூர்வீகம், வரலாறு என்பனவற்றை கருத்தில் கொண்டு மக்கள் அங்கே வணங்குவதற்கான உரித்து உள்ளது. அதை எவரும் தடுக்க முடியாது என்ற ரீதியிலே அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை உடனடியாகத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.