அரசாங்கத்தைப் பாதுகாக்கவே இராஜினாமா செய்தோம் – கபீர் ஹாசிம்

85107 kabhir haseem9993 copy
85107 kabhir haseem9993 copy

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்காதமை அவரைப் பாதுகாப்பதற்காக அல்ல, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காகவே என கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், கடந்த அரசாங்கத்தில் இருந்த அனைத்து முஸ்லீம் அமைச்சர்களும் ஒன்றாக இராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அந்த நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக தான் இருந்ததாகவும் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாக ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது, ஆனால் அது உண்மையில் அரசாங்கத்திற்கு எதிரானது என்றும் கபீர் ஹாசிம் குறிப்பிட்டார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் வாக்களித்திருந்தால், அது முழு அரசாங்கத்தையும், அந்த நேரத்தில் நாட்டின் ஸ்திரத்தன்மையையும் பாதித்திருக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அந்த நேரத்தில், எதிர்க்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வென்றிருந்தால், எங்கள் அரசாங்கமும் சரிந்திருக்கும். எனவே நாங்கள் பதியுதீனை அகற்ற விரும்பியதால் எங்கள் பதவிகளில் இருந்து விலக முடிவு செய்தோமே அன்றி அவரைப் பாதுகாக்க விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.