மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கே.கருணாகரன் கடமையைப் பொறுப்பேற்றார்!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை கருணாகரன் மாவட்ட செயலகத்தில் கடமையினைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

குறித்த நிகழ்வு இன்று (17) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை நிருவாக சேவை விசேடதர உத்தியோகத்தரான இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, ஆரையம்பதி, வாழைச்சேனை மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கட்டது.

இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும், வீதி அபிவிருத்தி, காணி மற்றும் சமுக அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக அமைச்சரவையினால் நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்ட அவர் இன்று சமயவழிபாட்டின் பின்னர் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதுடன்; மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் ஆயர் இல்லத்தில் வைத்து ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.

இதன்போது, அரசாங்க அதிபர் கருத்து வெளியிடுகையில்;

சவால்மிக்க பொறுப்புவாய்ந்த கடமையொன்றினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்துள்ளது. இதனைத் திறம்பட மேற்கொள்ள அனைவரினதும் ஒத்துழைப்புகளை பெரிதும் எதிர்பார்கின்றேன். இம்மாவட்டத்திலுள்ள அனைத்து இனமக்களுக்கும் இனமத பேதமின்றி சேவை வழங்குவதுடன் கடந்த காலங்களைவிட குறைவில்லாமல் எமது பணி சிறப்பாக அமையும் எனத் தெரிவித்தார்.

இக்கடமையைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப் பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன் மற்றும் மாவட்ட செயலக திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்களென பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.