ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற நிலையை உருவாக்க செயற்படும் ஜனாதிபதி – சீ.பி.ரத்னாயக்க

ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற நிலையை உருவாக்குவதற்காகவே ஜனாதிபதி தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். எனவே, 20ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேறிய பின்னர், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா, டயகம பகுதியில் இன்று (17) நடைபெற்ற வீதிபுனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

19ஆவது திருத்தச்சட்டமூலம் இல்லாதொழிக்கப்படும் என ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களின் போது அறிவிக்கப்பட்டது. தற்போது அதனை செய்ய முற்படும் போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

20இல் குறைகள் இருந்தால் அவற்றை சரிசெய்யலாம். ஆனால், அந்த நடவடிக்கையை கைவிட முடியாது. 20ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேறிய பின்னர், நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பொன்று இயற்றப்படும்.

அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அப்பணி நிறைவு செய்யப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சட்டரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல.

எனவே, சட்டத்துக்கு மதிப்பளித்து ரிஷாட் பதியுதீன் பொலிஸாரிடம் சரணடைய வேண்டும். எவராவது தவறிழைத்திருந்தால் தகுதிதராதரம் பாராது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.