தற்காலிக பழக்கடை நடாத்துனர்களுக்கும் மாநகர முதல்வருக்குமிடையில் விசேட கலந்துரையாடல்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 16 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 16 1

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் (வைரவர் கோவில் வீதியில்) மாநகரசபையின் குத்தகை மற்றும் அனுமதிகள் ஏதுமின்றி மாநகரத்திற்கு இடத்திற்கான நாளாந்த வாடகைப்பணம் (தண்டப் பணம்) மாத்திரம் செலுத்தி பல வருடங்களாக தற்காலிகமாக பழங்கள் விற்பனை செய்யும் கடைகளை நடாத்திவருபவர்களுக்கும் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று (16) யாழ் மாநகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலை ஆரம்பித்து உரையாற்றிய முதல்வர் அவர்கள் யாழ் மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதனுடன் அமைந்த வர்த்தக கட்டடத் தொகுதி செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு வருடமாக பல்வேறு முயற்சிகள் மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வந்தமை அனைவரும் அறிந்ததே. குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பேருந்து நிலையத்தை அண்மித்து அமையப் பெற்றுள்ள பழக்கடைகளும் தடைகளுள் ஒன்றாக அமைந்துள்ளமையை யாவரும் அறிவீர்கள்.

குறித்த வர்த்தகத் தொகுதிக் கட்டடத் தொகுதியை அமைப்பதற்கு தற்பொழுது அங்கு அமையப்பெற்றுள்ள தற்காலிக பழக்கடைகளையும் அகற்றி மாநகரின் நகர அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட தற்காலிக பழக்கடை நடாத்துனர்கள் தமது வருமான நடவடிக்கைள் பாதிக்கப்படாமலும், வாழ்வாதாரம் பாதிப்படையாமலும் அமையும் வகையில் மாநகரசபை தற்காலிக ஏற்பாடுகளை குறித்த அபிவிருத்திப் பணிகள் நிறைவு பெறும் வரை செய்து தரவேண்டும் எனவும், குறித்த கட்டடத் தொகுதி அபிவிருத்திப் பணிகள் நிறைவுற்றதும் அங்கு வர்த்தகத் தொகுதிகள் வழங்கப்படும் போது தற்பொழுது தற்காலிகமாக கடைகளை நடாத்திவருபவர்களுக்கு கடைத் தொகுதி வழங்கப்படுவதை மாநகரசபை உறுதிப்படுத்தி எமக்கு உத்தரவாதப்படுத்தி எம்மை பாதுகாக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

இதற்கு பதிலளித்த முதல்வர் அபிவிருத்திப் பணிகள் முடியும் வரை வழங்குவதற்கான தற்காலிக இடங்களை எம்மால் அடையாளம் செய்ய முடியாது என்றும், மாநகரசபைக்குள் பொது இடங்கள் இல்லை என்றும், தாங்கள் அனைவரும் ஒன்றாக அபிவிருத்தி திட்டம் நிறைவடையும் வரை தற்காலிக விற்பனைகளை மேற்கொள்ள முடியாது என்றும், குழுக்களாக பிரிந்து ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களை அடையாளம் செய்து தரும் பட்சத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என்றும், பண்ணைப் பகுதி குறித்து அவதானம் செலுத்தலாமா என்பது குறித்தும் தங்களுக்குள் கூடி தீர்மானியுங்கள் என்று குறிப்பிட்டார்.

மேலும் முதல்வர் குறிப்பிடுகையில் தாங்கள் குறிப்பிடுவது போன்று அவ்வாறு நேரடியாக புதிய கடைத் தொகுதிகளை வழங்க முடியாது என்றும், மாநகரசபை சட்ட விதிமுறைகளுக்கு அமையவே கடைகள் வழங்கப்படும் என்றும், வேண்டுமானால் பல வருடங்களாக கடைகளை நடாத்திய தங்களது வாழ்வாதாரமும், தங்களது குடும்பங்களும் பாதிக்கப்படக் கூடாது என்ற மனிதாபிமான அடிப்படையில் ஆளுநருடன் கலந்துரையாடி ஆளுநரின் அனுமதியுடன், சபையில் சபை உறுப்பினர்களின் ஆதரவுடன் பேருந்து நிலைய வர்த்தக கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டு எதிர்காலத்தில் கடைகள் வழங்கப்படும் பொழுது தற்பொழுது பழக்கடைகளை நடாத்தி வருவதுடன் மாநகரசபைக்கு நில வாடகையினை (தண்டப்பணம்) வழங்கிவரும் இந்த 30 பேரும் (தற்பொழுது நடாத்துபவர்களின் பெயருக்கே மாநகர பதிவின் பிரகாரம்) விண்ணப்பிக்கின்ற போது முன்னிலை அடிப்படையில் உள்வாங்குவது குறித்து மாநகரசபை சாதகமாகப் பரிசீலீக்க வேண்டும் என்ற சபைத் தீர்மானத்தை எடுத்து ஆளுநரின் அனுமதி பெற்று அதனை மாநகரசபையின் தற்போதைய சபை இல்லாது விடினும் தாங்கள் பாதிப்படையாத வண்ணம் தாங்களுக்கான உறுதிப்படுத்தலை நாம் செய்து தர எமது முழுமையான முயற்சிகளை மேற்கொள்வோம் என்று முதல்வர் கூறினார்.

முதல்வரின் கருத்தை ஏற்றுக் கொண்ட தற்காலிக பழக் கடை நடாத்துனர்கள் தாம் அப்பகுதியிலிருந்து கடைகளை அப்புறப்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும், தற்காலிக இடம் தொடர்பில் பரிசீலிப்பதாகவும், குறித்த அபிவிருத்தி திட்டம் நடைபெற ஒத்துழைப்பு வழங்குவதாகவும், மாநகரபையுடன் இணைந்து செயற்படுவோம் என்றும் கூறினர்.

இக் கலந்துரையாடலில் யாழ் மாநகர ஆணையாளர், செயலாளர், பிரதம வருமானவரிப் பரிசோதகர், மாநகரசபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.