மீண்டும் ஒரு முறை இந்த நாடு பயங்கரவாத தாக்குதலுக்குள்ளாக கூடாது- வியாழேந்திரன்

S.Viyalenthiran 700x380 1
S.Viyalenthiran 700x380 1

மீண்டும் ஒரு முறை இந்த நாடு பயங்கரவாத தாக்குதலுக்குள்ளாக கூடாது இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (17) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் எஸ்.வியாழேந்திரன் மேலும் கூறியுள்ளதாவது,

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி முழு இலங்கையையும் உலுக்கிய பயங்கரவாத குண்டுத் தாக்குதல், எமது மட்டக்களப்பு மாவட்ட சீயோன் தேவாலயத்திலும் இடம்பெற்றது.

சஹ்ரான் குழுவினுடைய இந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதலால் நாட்டின் சுற்றுலாத்துறையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டது. மட்டுமல்ல பாதுகாப்புத்துறை தொடர்பில் மக்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டது. அந்த அடிப்படையில் இந்த அரசாங்கம் குண்டுத்தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர்களை விசாரிப்பதோடு அது தொடர்பான விடயங்களை ஆராய்வதிலும் மிகக் கவனமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

பயங்கரவாத குண்டுத் தாக்குதலோடு தொடர்புபட்ட சஹ்ரான் குழுவினர் பயன்படுத்திய கார்கூட காத்தான்குடி பகுதியில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதாக அறியக்கூடியதாக இருக்கின்றது. ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பச்சிளங் குழந்தைகள்கூட வெடித்துச் சிதறினார்கள்.

நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவேண்டுமானால் இதனுடன் தொடர்புபட்டவர்கள் எந்த தரப்பாக இருந்தாலும் எந்த பிரிவாக இருந்தாலும் என்ன செல்வாக்கில் இருந்தாலும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட்டு விசாரணைசெய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும்.

இந்த விசாரணைகளை அரசாங்கம் சரியான முறையில் பல கோணங்களிலும் முன்னெடுத்து வருகின்றது. நாட்டின் பாதுகாப்பு முக்கியம். நாட்டில் மக்கள் சுதந்திரமாகவும் சமாதானமாகவும் அமைதியாகவும் வாழவேண்டும். பொருளாதாரத்தை கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது என மேலும் தெரிவித்துள்ளார்.