மன்னாரில் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

IMG 5462
IMG 5462

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை மன்னார் காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கேரள கஞ்சா 200 கிலோ 825 கிராம் எடை கொண்டது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவல் துறை அத்தியட்சகர் பந்துல வீர சிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாகவும், மன்னார் காவல் துறை நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன் அவர்களின் வழி நடத்திலின் கீழ் மன்னார் காவல் துறை ஊழல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.டி.வீரசிங்க தலைமையிலான காவல் துறை குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை(18) காலை 4.30 மணியளவில் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது 94 பொதிகளில் பொதி செய்யப்பட்ட 200 கிலோ 825 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.

IMG 5461

குறித்த கேரள கஞ்சா பொதிகள் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியானது என தெரிய வந்துள்ளது.சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

மேலதிக விசாரனைகளை மன்னார் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இதே வேளை இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட நிலையில் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி சட்ட விரோத மாத்திரைகளை நேற்று (17) சனிக்கிழமை மாலை திருக்கேதீஸ்வரம் சந்தியில் வைத்து காவல் துறையினர் மீட்டுள்ளதோடு, சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட மாத்திரைகள் பல இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

IMG 5459