கைதான இளைஞர் மரணம்:காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 8 பேர் கைது!

ARREST 300x150 1
ARREST 300x150 1

பூகொடை, பண்டாவள பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப்பேச்சளர் பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

21 வயதான குறித்த இளைஞர், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில்காவல் துறையினால் கைதுசெய்யப்பட்ட நிலையில், பூகொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தனது கணவர் கைதான தினம் இரவு ஒரு சில நபர்களால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டார் என்று அவரது மனைவி காவல்துறை முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சாட்சியங்களிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பூகொடைகாவல்நிலைய காவல்துறைஉத்தியோகத்தர் ஒருவர் மற்றும் 7 வெளியாட்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடக பேச்சளாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கம்பஹா சிரேஷ்டகாவல்துறை அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ், உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.