6 அடி நீளமான கஞ்சா செடி நான்கும் துப்பாக்கி ஒன்றும் மீட்பு!

leaf edges tipped up from heat
leaf edges tipped up from heat

வவுனியா, முருகனூர் பகுதியில் 6 அடி நீளமான கஞ்சா செடி நான்கு மீட்கப்பட்டதுடன், துப்பாக்கி ஒன்றும் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இன்று (18.10.2020) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு உப காவல்துறை பரிசோதகர் தலைமையில் காவல்துறை குழுவினர் வவுனியா, முருகனூர் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது அப் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பின்பகுதியில் உள்ள தோட்டத்தில் வளர்க்கப்பட்ட 6 அடி உயரமான நான்கு கஞ்சா செடி கண்டுகள் பிடிக்கப்பட்டு அவை மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வீட்டின் பின்பகுதியில் ரவைகள் இடப்பட்டு சுடுவதற்கு தயாரான நிலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் அதற்குரிய ரவைகளும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளரான 40 வயது குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.