கரைச்சி பிரதேச சபையில் 37 ஆளணி வெற்றிடங்கள் – அ.வேழமாலிகிதன்

கரைச்சி பிரதேச சபைக்கு தீயணைப்பு பிரிவு ஊழியர்கள் 21 பேர் அடங்கலாக 37 ஆளணி வெற்றிடங்கள் இன்றுவரை பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் அதனால் சபையினால் முன்னெடுக்கப்படவேண்டிய பல சேவைகளை மக்களிற்கு முன்னெடுக்க முடியாது உள்ளதாக கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

”கரைச்சி பிரதேச சபைக்கான 113 ஆளணியில்16 வெற்றிடங்கள் தொடர்ந்தும் காணப்படுவதாகவும், அது தவிர்ந்து தீயணைப்பு பிரிவிற்கான 21 ஆளணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும் அதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சபையின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வெற்றிடத்தினை நிரப்புவதற்காக 43 அயற்பணியாளர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அவர்களிற்கு சம்பளமாக 11.5 மில்லியன் ரூபா சபை நிதியிலிருந்து வழங்கப்படுவதாகவும் இதனால் மக்களிற்கு செய்யவேண்டிய பல சேவைகளையும் சபையின் செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாது உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர்,அமைச்சர்கள், உள்ளூராட்சி ஆணையாளர், தேசிய சம்பளங்கள் மற்றும் ஆளணி ஆணைக்குழு ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இன்றுவரை தீர்வு எட்டப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரிடம் வினவுகின்றபோது;

புதிய நியமனங்களை வழங்குவதற்கு கொழும்பிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனால் கரைச்சி பிரதேச சபைக்கு மாத்திரமல்ல வடக்கு மாகாணத்தில் உள்ள 34 சபைகளிற்கு இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஆசிய அபிவிருத்தி வங்கியினால் கடந்த அரசின் காலத்தில் 1200 மில்லியன் நிதியில் 2ம் தர தகரம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது, அதற்கான ஆய்வறிக்கைகள் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்து கட்டுமானத்திற்காக தயார் நிலையில் உள்ள நிலையில் அந்த அபிவிருத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக இலங்கை அரசிற்கு கடனாக வழங்கப்பட்டு அரசினால் பிரதேச சபைகளிற்கு மானிய அடிப்படையில் குறித்த திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட இருந்தது. இந்த நிலயைில் குறித்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நகரை அண்மித்த 30 கிலோமீட்டர் முக்கியத்துவம் வாய்ந்த வீதகளிற்காக 450 மில்லியனும், கழிவகற்றல் முகாமைத்துவத்திற்கான 100 மில்லியனும், கிளிநொச்சி சேவைச் சந்தைக்கான கட்டட தொகுதி அமைப்பதற்காக 400 மில்லியனும், நூலகம், நீச்சல் தடாகம், கலாச்சார மண்டபம் உள்ளிட்டவை அடங்கலாக குறித்த திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு 1200 மில்லியன் செலவில் 2ம் தர நகரம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலயைில் அத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளமையால் மேற்கொண்டு பணிகளை முன்னெடுக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பபிட்டுள்ளார்.

இலங்கை அரசு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும் நகரங்களை முன்னேற்றத்திற்குள் கொண்டு செல்வதற்கு விரும்பவில்லை எனவும், அதற்கான தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறித்த ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.