மட்டக்களப்பு காவல்துறையினர் 50 பேருக்கு முதற்கட்டமாக பி.சி.ஆர் பரிசோதனை!

மட்டக்களப்பு காவல்துறை நிலைய உத்தியோகத்தர்கள் 50 பேருக்கு கொரோனா பி.சி.ஆர் பிசோதனைகள் இன்று திங்கட்கிழமை (26) மட்டக்களப்பு காவல்துறை விடுதியில் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்டது .

தற்போது நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பரம்பலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய நாடளாவிய ரீதியில் அரச அலுவலகங்கள், திணைக்களங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களில் நேரடியாக பொதுமக்களுடன் கடமை நிமித்தம் தொடர்புடையவர்களுக்கு பி.சி.ஆர் பிசோதனைகள் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் காவல்துறை நிலையங்களில் கடமை புரியும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கான பி.சி.ஆர் பிசோதனைகள் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் மட்டக்களப்பு காவல்துறை நிலைய மக்கள் தொடர்பாடல் காவல்துறைப் பிரிவு பொறுப்பதிகாரி ஜி .உதயகுமார் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தலைமையக காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி பி. கே ஹெட்டிஹாராச்சி தலைமையில் மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் தலைமையிலான பொதுசுகாதார பரிசோதகர்கள் குழுவினால் முதற்கட்டமாக சுமார் 50 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது .