வவுனியா குளத்தினுள் அமைக்கப்பட்ட சுற்றுலா மையத்திற்கு எதிராக துண்டு பிரசுரம்!

வவுனியா குளத்தினுள் சுமார் 2 ஏக்கர் வரையில் மண் போடப்பட்டு நகரசபையினால் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணி துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டது.

வவுனியா குளத்தில் ஒரு பகுதியில் அனுமதி பெறப்படாது நீர்ப்பாசன திணைக்களத்தின் ஒப்புதலுடன் கிரவல் மண் இடப்பட்டு பூங்கா மற்றும் படகு சவாரி என்பன உள்ளடங்கிய சுற்றுலா தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக இயற்கை விரும்பிகள் குளத்தினுள் மண் போடப்பட்டமை விவசாயத்தினை பாதிக்கும் மற்றும் நிலத்தடி நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் என தெரிவித்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வவுனியா குள கமக்காரர் அமைப்பு குறித்த சுற்றுலா தளத்திற்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யாத நிலையில் அவ் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணி என்ற அமைப்பு குளத்தின் பயன்பாடு மற்றும் சுற்றுலா மையத்தினால் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் தொடர்பில் விழிப்புணர்வு மேற்கொண்டிருந்ததன் தொடர்ச்சியாக குறித்த செயலணி இன்று காலை வவுனியா நகர்ப்பகுதியில் வவுனியா குளத்தினுள் மண் இடப்பட்டமையினால் ஏற்படப்போகும் ஆபத்துக்கள் தொடர்பில் துண்டுப்பிரசுத்தினையும் விநியோகித்திருந்தனர்.

இதன்போது 30ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வயதானவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்படத்தக்கது.