யாழ். மாவட்டத்திலும் நிவாரணப் பொதி வழங்க ஏற்பாடு – டக்ளஸ்

கொரோனா தொற்று பரவல் காரணமாக யாழ் மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் உள்ள 772 குடும்பத்தைச் சேர்ந்த 1,700 பேருக்கு அரசினால் வழங்கப்படும் 5,000 ரூபா நிவாரணப்பொதி உடன் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ”சுய தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் நாடுபூராகவும் வழங்கப்பட்டு வரும் நிலையில், யாழ். மாவட்டத்திற்கான இடர்கால நிவாரண பொதிகள் இதுவரை வழங்கப்பட்டிருக்கவில்லை என தெரியப்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் பின்னர் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு சென்று பேசியதன் பயனாக அந்தந்த கிராம சேவகர்கள் ஊடாக தனிமைப்படுத்தலில் உள்ள அனைவருக்கும் முதற்கட்டமாக நிவாரண பொதிகளை வழங்கி வைக்க சகல அரச அதிபர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, தென்பகுதி மக்களுக்கு கிடைக்கும் நிவாரணங்கள் வடபகுதி மக்களுக்கு கிடைக்காமல் அரசாங்கம் பாரபட்சம் காட்டுவதாக சிலர் பேசுவதில் எந்த உண்மையும் இல்லை. எனவே இது தொடர்பில் மக்கள் குழப்பம் அடைய வேண்டிய தேவையும் இல்லை என்றும் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.