சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை இன்றைய தினம் இடம்பெற்றது.

மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதிவரை வழக்கை ஒத்திவைத்தார்.

இதேவேளை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கவேண்டாம் என அரசதரப்பு சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்ட வாதமும் நிராகரிக்கப்பட்டதுடன் சிறைச்சாலை ஆணையாளர் அனுமதி வழங்கினால் அவர் கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியும் எனவும் நீதிபதி இதன்போது தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.