வீட்டிலிருந்து தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுங்கள் – வவுனியா அரச அதிபர்!

கொரோனா நிலமையைக் கருத்தில் கொண்டு வீட்டில் இருந்து சமய அனுட்டானங்களில் ஈடுபட்டு தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுமாறு வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்து மக்களின் பிரதான நிகழ்வாகிய தீபாவளி பெருநாள் வருகின்றது. சென்ற வருடங்களைப் போல் அல்லாது தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா நிலமையினைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட அறிவுரைகளின் பிரகாரம் இந்த நிகழ்வினைக் கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளோம்.

வவுனியா மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட இந்துக்கள் வாழ்கின்றனர். இருப்பினும் தற்போதைய கொரோனா நிலையை கருத்தில் கொண்டு சுகாதார திணைக்களத்தினால் வழங்கிய அறிவுரைகளுக்கு அமைய கோவில்களில் பூஜைகளுக்கு ஆகக்குறைவாக எவ்வளவு பேர் தேவையோ அவர்களை மாத்திரம் வைத்து பூஜை செய்யவும். இயலுமானவரை மக்கள் கோவில்களுக்கு செல்லாது வீட்டில் இருந்தவாறே சமய அனுட்டானங்களில் ஈடுபடவும்.

வவுனியா மாவட்டத்தில் 500 இற்கு மேற்பட்ட இந்து ஆலயங்கள் உள்ளன. அங்கு பூஜைக்கு தேவையானவர்களை மாத்திரம் உள்வாங்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். மக்கள் வீட்டில் இருந்து தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதுடன் சமய அனுட்டானங்களில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்ளுகின்றோம் எனத் தெரிவித்தார்.