கடந்த அரசு மக்களை வீட்டுத்திட்டம் என்ற பெயரில் கடனாளியாக்கியுள்ளது – திலீபன் எம்.பி

கடந்த அரசாங்கம் மக்களை வீட்டுத்திட்டம் என்ற பெயரில் கடனாளியாக்கியுள்ளது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்தார்.

வவுனியாவில் கடந்த காலத்தில் வீடமைப்பு அதிகார சபையினால் அமைக்கப்பட்டு முடிவுறாத வீடுகளை கற்குளம் பகுதியில் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க அரைகுறையாக உள்ள வீடுகளை பார்வையிட்டிருந்தேன். உண்மையில் கடந்த ஆட்சியில் வீட்டுத்திட்டம் என்ற பெயரில் மக்களை கடனாளியாக்கிய திட்டம் தான் இந்த வீட்டுத்திட்டமாக உள்ளது.

எனினும் வரவு – செலவுத் திட்டத்தில் அரைகுறையாக உள்ள வீடுகளுக்கான மிகுதிப்பணம் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இந்த விடயத்தினை தெரியப்படுத்தியுள்ளேன். ஒதுக்கப்படும் நிதியில் மேலும் அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டு வீடுகள் கிடைப்பதற்கு வழி செய்யுமாறு கோரியுள்ளேன்.

அத்துடன் வீடமைப்பு இராஜாங்க அமைச்சருடனும் கலந்துரையாடியதன் அடிப்படையில் அவரும் இந்த மக்களின் கஸ்ரத்தினை நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார் என தெரிவித்தார்.