கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வீட்டில் தீபாவளி!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் இன்று (14) இந்து மக்கள் தீபாவளி திருநாளை சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் வாழைச்சேனை காவல்துறை பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதன் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தீபாவளி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுகாதார திணைக்களத்தின் அறிறுவுத்தலுக்கமைய இம்முறை இந்து மக்கள் வீட்டில் மாத்திரம் தங்களது வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், முன்னையதை போன்று ஆலயங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு செல்லாமல் வீட்டில் தங்களது குடும்ப உறவுகள் சகிதம் தீபாவளியை கொண்டாடுவதை காண முடிகின்றது.

நரகாசுரன் என்ற தீய சக்தியை மாய்த்து ஸ்ரீ கிருஷ்ணன் வெற்றி பெற்ற நாள் தீபாவளி திருநாள். கிருஷ்ணனை முதன்மைத் தெய்வமாகப் போற்றித் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். ராமனைப் போற்றி வழிபடுகின்றனர்.

ராமன், ராவணனை வதைத்தான். ராமனது 14 ஆண்டுகள் வனவாசமும் முடிந்தது. அயோத்தி மக்கள் ராமனை வரவேற்க, ஊர்களையும், நகரங்களையும் அலங்கரித்தனர். தீபங்களை வரிசை வரிசைகளாக ஏற்றினர். இதுபோல், மக்கள் ராமனை அயோத்திக்கு வரவேற்ற திருநாளே தீபாவளித் திருநாளாக மலர்ந்தது.

வரலாற்று அடிப்படையில் தீபாவளியை முதன் முதலில் கொண்டாடியவர்கள் சமணர்களே என்று சொல்லலாம். சமணர்கள் ஏறக்குறைய இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.