மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் டெங்கு அதிகரிப்பை கட்டுப்படுத்த அவசர ஒன்றுகூடல்

01 10 2
01 10 2

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு தாக்கம் அதிகரித்து காணப்படும் வகையிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவு டெங்கு தாக்கத்தில் முதலாம் இடத்தில் காணப்படுவதாலும் டெங்கை ஒழிக்கும் வகையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராம அதிகாரி பிரிவுகளில் டெங்கை கட்டுப்படுத்தும் நோக்கில் கிராம சேகவர் பிரிவு ரீதியாக வேலைத் திட்டம் ஆரம்பித்தல், டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியிடல், பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளல், டெங்கு தாக்கம் அதிகமாக கொண்டுள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தல், கிணற்றுக்கு பாதுகாப்பு வேலைப்பாடுகள் செய்தல், பிரதேச சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் டெங்கு தாக்கம் அதிகமுள்ள இடங்களை இணங்கண்டு நடவடிக்கை மேற்கொள்ளல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தினமும் டெங்கை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதால் டெங்கு ஓரளவு குறைந்துள்ள நிலையில் முற்று முழுதாக டெங்கை இல்லாமல் ஒழிப்பதற்கு பொதுமக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியம் என்று ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.