தடையை மீறி மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிப்பவர்கள் கைதுசெய்யப்படுவர்-அஜித் ரோஹண.

602f48d1 maveerar naal
602f48d1 maveerar naal

“தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எதிராக வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பொலிஸார் பெற்றுள்ளனர். எனவே, இந்தத் தடை உத்தரவை யாரேனும் மீறினால் அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் காவற்துறை பேச்சாளர் பிரதிப் காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண.

வடக்கிலுள்ள 6 நீதிமன்றங்களில் காவற்துறையினர் நேற்று மாவீரர் தின நினைவேந்தலுக்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்தனர். இதையடுத்து வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட நீதிமன்றங்கள் மாவீரர் தின நினைவேந்தலுக்குத் தடையுத்தரவுகளை வழங்கியுள்ளன.

இது குறித்து காவற்துறை பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்ததாவது:-

“மன்னாரிலும் வவுனியாவிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடைசெய்யும் உத்தரவை நீதிமன்றங்கள் நேற்று வழங்கியுள்ளன.

மன்னாரில் ஐந்து பேருக்கு எதிராகவும், வவுனியாவில் எட்டுப் பேருக்கு எதிராகவும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான நடவடிக்கைகளில் இந்த நபர்கள் ஈடுபட்டிருந்ததைத் தொடர்ந்தே இந்த உத்தரவைப் பெற்றோம்.

இந்தத் தடை உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராகப் பொலிஸார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறான நிகழ்வுகள் தமிழ் – சிங்கள மக்களுக்கு இடையிலான பிரிவினையை அதிகரிக்கும்”எனவும் குறிப்பிட்டுள்ளார்