யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு -செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க முன்னணி தீர்மானம்!

1e4e5055 90d824fe jaffna mc 850x460 acf cropped
1e4e5055 90d824fe jaffna mc 850x460 acf cropped

யாழ்ப்பாணம் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் எனக் கட்சித் தலைமைக் கூட்டத்தில் தீர்மானித்து உறுப்பினர்களிடம் கையொப்பம் பெறப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர்களைப் பதிவுத் தபாலில் கடிதம் அனுப்பி கடந்த 14ஆம் திகதி கலந்துரையாடலுக்குக் கட்சித் தலைமை அழைத்திருந்தது.

அவ்வாறு அழைக்கப்பட்ட கூட்டத்துக்கு மாநகர சபையில் முன்னணி சார்பில் அங்கம் வகிக்கும் 13 உறுப்பினர்களில் 8 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் உள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சபைக்கு வரும்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் அனைவரும் அதனை எதிர்க்க வேண்டும் எனவும், இரகசிய வாக்கெடுப்பு கோரினால் முதல் வரிசையில் உள்ள முன்னணி உறுப்பினருக்குக் காண்பித்தே வாக்களிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.

இவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூட்டத்தில் கலந்துகொண்ட 8 உறுப்பினர்களிடமும் கட்சியின் தலைமையால் கையொப்பம் பெறப்பட்டுள்ளது.