வீடுகளிற்கு முன்பாக,ஒளிதீபம் ஏற்றுங்கள்- மயூரன்.

DSC09386 720x450 1
DSC09386 720x450 1

மாவீரர் நினைவேந்தல் நாளில் வீடுகளிற்கு முன்பாக ஒளி தீபம் ஏற்றி,சிவப்பு மஞ்சள் கொடிகளை காட்சிப்படுத்தி உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்குமாறு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் கோரிக்கை விடுத்துள்ளார்.


மாவீரர் தினத்தினை நடாத்துவதில் ஏற்ப்படுத்தப்படும் தடைகள் தொடர்பாக அவர் இன்று அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..


தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் விதத்தில் பேரினவாத சர்வாதிகார அரசு நீதி மன்றமூடாகவும்,படையினரூடாகவும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகின்றது. இதன்மூலம் உயிரிழந்தவர்களை அஞ்சலிப்பதை சட்டரீதியாக தடுக்கும் கீழ்த்தரமான நாடாக இலங்கையும் அதன் அரசுத்தலைவர்களும் வரலாற்றில் இடம் பிடிப்பர் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

 
நினைவேந்தல் நிகழ்விற்கு சுகாதார நடைமுறைகளை காரணம் காட்டும் இந்த அரசு வைரஸ்தாக்கம் அதிகரித்திருந்த போது ஊரடங்கு சட்டம்  அமுல்படுத்தப்பட்டிருந்த கொழும்பு மாவட்டத்தில் போர் வெற்றிவிழாவை கடந்த மே மாதம் கொண்டாடியது. இது தான் இலங்கையின் நீதியா? கடந்த வாரம் கூட பிரதமர் மகிந்தவின் பிறந்ததின நிகழ்வுகள்  அனைத்து ஆலயங்களிலும் நடைபெற்றது. உயிருடன் இருப்பவரை நினைவு கூறலாம்,இறந்தவரை நினைவு கூறமுடியாது இதுதான் இந்த நாட்டின் கொள்கையா? ஒருவேளை கோட்டபாயவினதும், மகிந்தவினதும் பிள்ளைகள் போரில் மரணித்திருந்தால் தமிழ்மக்களின் நியாயமான உணர்வுகளை அவர்கள் புரிந்திருக்க முடியும். இந்த நாட்டில் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலைகள், அடக்குமுறைகள் அனைத்தும் இன முரன்பாட்டால் ஏற்பட்ட விளைவுகளே என்பதை இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இந்த பேரினவாதம் மறைக்கப்போகின்றது.

குருதிக்கறை படிந்த மகிந்த, கோட்டபாய, அரசு மீண்டும் ஒரு இனப்படுகொலையை ஏற்ப்படுத்தவதற்கான இரத்தவெறி பிடித்த ஆரம்ப புள்ளிகளையே இந்த அடக்குமுறைகளின் மூலம் இடுகின்றது என்பதை அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.


நாட்டில் எந்த அபிவிருத்தியையும் பொருளாதார முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாத சிங்கள அரசுகள் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மாத்திரம் மூலதனமாக வைத்து அரசியல் இலாபடைமடைந்துவருகின்றது. இதனை சிங்களவர்கள்  உணராத வரையில் இந்த நாடு முன்னேற்றமடைவதற்கான வாய்ப்புகள் துளிஅளவேனும் இல்லை. 

 
எந்த தடை வரினும் அரசின் அடக்குமுறையை தகர்த்து நினைவேந்தல் உரிமையை அனுஸ்டிக்கும் கடப்பாடும்,பொறுப்பும் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் காணப்படுகின்றது. எனவே இம்முறை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வை வீரகாவியமடைந்தவர்களின் பெற்றோர்களும்,அவர்களது உறவினர்களும் மாத்திரம் அஞ்சலிப்பதை தவிர்த்து, இலங்கையின் வடக்கு கிழக்கு மலையகத்தை சேர்ந்த ஒட்டுமொத்த தமிழ்மக்களும், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களும்,இளைஞர்களும் பேரெழுச்சியுடன் அனுஸ்டிக்க வேண்டிய தார்மீக பொறுப்பையும்,கடமையையும் கொண்டுள்ளனர். இதன் மூலமே தமிழர்களின் தீராத தாகமாகவுள்ள இன விடுதலைபற்றியும், விடுதலைப்போராட்டம் பற்றியும் எதிர்கால சந்ததிகள் அறியும் நிலையை ஏற்படுத்த முடியும்.  


அந்தவகையில் எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை தாயகத்தில் வாழும் அனைத்து தமிழ் மக்களின் வீடுகளிற்கு முன்பாக ஒளிதீபம் ஏற்றி சிவப்பு மஞ்சல் வர்ணக்கொடிகளை காட்சிப்படுத்தி விடுதலைப்போரின் வீர மறவர்களிற்கு, அஞ்சலியினை செலுத்தி, அரசின் அடக்குமுறைக்கு பதிலடி கொடுத்து ஒடுக்குமுறையை பிரயோகிக்கும் இந்த அரசுக்கு முகத்தில் அறைந்தது போல பேரெழுச்சியுடன் அனுஸ்டிப்பதற்கு நாம் தயாராக வேண்டும். என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.