மண் அகழ்வு கும்பலால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி

camels 1
camels 1

மட்டு. வெல்லாவெளி காவற்துறை பிரிவுக்குட்பட்ட அணைக்கட்டு நெற்காணி வயல் பகுதியில் மணல் ஏற்ற வந்தவர்களால்,  குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(27) மாலை தாக்கப்பட்டு, மத்தியமுகாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மட்டு. போரதீவுப்பற்று வெல்லாவெளி செயலகப் பிரிவுக்குட்பட்ட அணைக்கட்டு வயல் காணிக்குள் அத்துமீறி மண் ஏற்றப்படுவதை அறிந்த காணியின் உரிமையாளர் உரிய இடத்திற்கு சென்ற வேளை உழவு இயந்திரத்தில் மண் அகழ்வதை நிறுத்துமாறு தர்க்கித்த வேளையிலும், மணல் ஏற்றுபவர்கள் கைவிடவில்லை.

மேலும், மோட்டார் சைக்களிளில் இருந்துகொண்டு மண் அகழ வேண்டாம் என பல தடவை கூறியபோதிலும் மண் அகழும் கும்பல் மணல் ஏற்றுவதை நிறுத்தாது, உழவு இயந்திரத்தால் காணியின் உரிமையாளரையும் அவரது மோட்டார் சைக்கிளையும் தாக்கியுள்ளனர்.

மண்டூர் 13 ஆம் கிராமத்தைச் சேர்ந்த க.தம்பிராசா (வயது-49) எனும் 14 ஆம் கிராம பாடசாலையில் ஆசிரியராக  கடமையாற்றுபவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதுடன், அவரது மோட்டார் சைக்கிளும் பலத்த சேதங்களுக்குட்பட்டுள்ளது.

றாணமடு – அணைக்கட்டு வயல் பாதையில் மணல் அகழ்வதற்கு அனுமதியற்ற நிலையில், தொடர்ச்சியாக இவ்வாறான மண் அகழ்வு சம்பவங்கள் இடம்பெறுவதனால் வயல் நிலங்களில் சேதனங்கள் சேதமுறுவதாகவும், வயல் நிலப் பாதை உடைப்பெடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காவற்துறையினரின் அனுமதி பாதுகாப்புடன் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதனால், மண் அகழ்வினை தடுத்து நிறுத்த உரிய உயர் அதிகாரிகள் முன்வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், காவற்துறையினர் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.