வவுனியாவில் மயானத்திற்குரிய காணிக்கு மண் நிரப்பி அபகரிக்க முயற்சி!

IMG c6fe943b5aa6459e1f9b4b70f9dc6aeb V 1
IMG c6fe943b5aa6459e1f9b4b70f9dc6aeb V 1

வவுனியா குருமன்காடு பகுதியிலுள்ள நகரசபையின் கீழ் உள்ள முஸ்லிம் மக்களின் மயானத்திற்குள் மண் நிரவி காணியை அபகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நகரசபையினரிடம் எவ்விதமான அனுமதிகளும் பெற்றுக்கொள்ளாமல் குறித்த காணிக்கு மண் நிரப்பும் நடவடிக்கை நகரசபையினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா குருமன்காடு பகுதியிலுள்ள பட்டாணிச்சூர் முஸ்லிம் மக்களின் மயானத்திற்கு ஒதுக்கப்பட்ட காணி நகரசபையின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றது. அண்மைய சில தினங்களாக அக்காணியில் மண் நிரவி காணி அபகரிக்கும் முயற்சி இடம்பெற்று வருகின்றது. இது குறித்து நகரசபை வருமானப்பகுதியினால் குறித்த மயானத்திற்கு மண் நிரவும் பணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நகரசபையின் கீழ் உள்ள மயானத்திற்குரிய காணிக்கு முன்னாள் அமைச்சரின் அனுமதியுடன் முப்பது வருடங்களுக்கு நீண்ட கால குத்தகைக்கு ஆவணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து நகரசபை வருமானப்பகுதியினரால் குறித்த காணிக்கு மண் நிரப்பும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகள் நகரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குருமன்காடு பகுதியிலுள்ள முஸ்லிம் மக்களின் மயானம் வவுனியா மன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ளன. தற்போது மன்னார் பிரதான வீதி புனரமைப்புச் செய்யப்பட்டு வரும் இவ்வேளையில் குறித்த மயானத்திற்குரிய ஒரு பகுதிக்கு மண் நிரவி காணி அபகரிக்கும். நடவடிக்கை நகரசபையினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நகரிலுள்ள குளத்திற்கு மண் நிரவும் பணிகள் இடம்பெற்றது. அந்நடவடிக்கையும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.