மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்

01 4 1 3
01 4 1 3

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரனை கூட்டத்தினை கூட்டுமாறு உள்ளுராட்சி ஆணையாளருக்கு அறிவித்தும் இதுவரை நிருவாக ரீதியாக எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதன் பின்னால் அரசியல் செயற்பாடு உள்ளதா என்ற கேள்வி எங்கள் மத்தியில் எழுந்துள்ளதாக சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பிரதேச சபையின் வரவு செலவு திட்ட பிரேரனைக்கு இன்று சபைக்கு வருகை தந்த சபை உறுப்பினர்கள் பிரேரனை கூட்டத்தினை நடாத்தாமை காரணமாக சபை முன்பாக ஒன்றிணைந்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தனர்.

இதன்போது சபை உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கையில்,

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு நாளை உயிரோடு இருக்க முடியுமா என்ற அச்ச உணர்வு ஏற்படுகின்றது. எங்களது உறுப்பினர்களை அச்சுறுத்துகின்றார்கள். அத்தோடு இங்கு காவல்துறையினரை குவித்து எங்களை அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் கி.சேயோன் தெரிவித்தார்.

கொரோனா காரணமாக சபையை ஒத்தி வைத்தார். ஆனால் பிரதேச சபையில் 38 உத்தியோகத்தர்களுக்கு மேல் வேலை செய்கின்றனர். ஆனால் 23 சபை உறுப்பினர்களை வைத்து பிரேரனையை நடாத்த துணிவில்லாமல் அச்சம் கொள்கின்றார். இவ்வாறு உள்ள தவிசாளர் இராஜினாமா செய்து விட்டு செல்ல வேண்டும்.

முறைகேடான தன்மை, உறுப்பினர்கள் மற்றும் மக்களை மதிக்காத தன்மை கடந்த காலங்களில் நடைபெற்று வருகின்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையில் இயங்கும் தவிசாளரினால் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. மக்கள் சேவைக்கு இங்கு தவிசாளரும், செயலாளரும் இல்லை. இவ்வாறு இருவரும் ஓடி ஒலிப்பதற்காகவா பிரதேச சபையின் நடவடிக்கை இருக்கின்றது என்று மக்கள் கேட்கின்றனர் என சபை உறுப்பினர் கி.சேயோன் மேலும் தெரிவித்தார்.

சபைக்குட்பட்ட பகுதியில் குத்தகையினை மேற்கொண்ட பிள்ளையானின் ஆதரவாளர்கள், உறவினர்கள் சபைக்கு அதிகமான நிதியை செலுத்த வேண்டி உள்ளது. இவை மிகவிரைவில் வெளிவரும். சபையில் பல இலட்சக்கணக்கில் குத்தகை ஊழல் இடம்பெற்றுள்ளது. இவர்கள் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் சகாக்களும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் என்பதாலும். இன்றும் இதற்கு நடவடிக்கை இல்லை ஏனெனில் இவர்கள் சிறிய முதலை அவர் பெரிய முதலை. இந்த சபையின் தொடர்ச்சியான ஊழல் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய முன்னனியின் சபை உறுப்பினர் கே.குணசேகரன் மேலும் தெரிவித்தார்.

சபை உறுப்பினர்களின் அனுமதியை பெறாமல் தவிசாளர் பணங்களை செலவு செய்துள்ளார். இவர் சபையில் ஊழல்களை செய்துள்ளார் என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த ஊழலை ஒழிக்க தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகின்றேன் என நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் சபை உறுப்பினர் இப்றாஹிம் அஸ்மி மேலும் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஓட்டமாவடி பிரதேச சபையின் கடையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் தன்னை மிரட்டியதாக ஐக்கிய தேசிய கட்சியின் சபை உறுப்பினர் எம்.எல்.நபீரா தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட பிரரேரணைக்கு வருமாறு கடிதம் வழங்கப்பட்ட நிலையில் இன்று சபைக்கு வந்த சமயத்தில் குறித்த உத்தியோகத்தர் எதற்காக இங்கு வந்துள்ளாய், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று என்னை மிரட்டிச் சென்றுள்ளார். அத்தோடு கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது என்று எனக்கு இதுவரை தகவல் வழங்கப்படவில்லை என்றும் சபை உறுப்பினர் எம்.எல்.நபீரா மேலும் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரனை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கூட்டத்தினை கூட்டுமாறு மாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கு ஞாயிற்றுக்கிழமை மகஜர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை சபை உறுப்பினர்கள் தொலைபேசியூடாக நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

இதன்போது தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட மகஜரின் பிரகாரம் பிரேரணை ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் விளக்கம் வழங்குமாறும், ஒத்திவைக்கப்பட்டு பதினான்கு நாட்களுக்குள் மீளவும் சபை கூட்டப்பட வேண்டும் என்றும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எஸ்.மணிவண்ணன் தெரிவித்ததை தொடர்ந்து சபை உறுப்பினர்கள் கலைந்து சென்றதுடன், இதில் தங்களுக்கு இன்னும் திருப்தி இல்லை என்றும் தெரிவித்தனர்.