கைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்தமையே மஹர சிறை கலவரத்துக்குக் காரணம்- இராஜாங்க அமைச்சர்

49c7d753 91a9b0e0 prison 850 850x460 acf cropped

கம்பஹா மாவட்டத்திலுள்ள மஹர சிறைச்சாலையில் நேற்று மாலை முதல் ஏற்பட்ட வன்முறை இன்று நண்பகல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது எனச் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தின் போது 8 கைதிகள் உயிரிழந்துள்ளன எனவும், 50 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனாத் தொற்றைக் காரணம் காட்டி கைதிகள் சிலர் நேற்று மாலை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தபோது, சிறைச்சாலை அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இதன்போது கைதி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

அதன்பின்னர் கைதிகள் அங்கிருந்த கட்டடங்களுக்குத் தீ வைத்தும், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தியும் நடந்துகொண்ட நிலையில் விசேட அதிரடிப்படை மற்றும் கலகம் அடக்கும் காவற்துறையினரை பயன்படுத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நிலைமையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின்போது துரதிஷ்டவசமாக 8 கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்தச் சம்பவத்தின் பின்னால் கைதிகளைத் தூண்டும் வகையில், வெளியில் இருந்து யாரேனும் செயற்பட்டுள்ளனரா? என்று புலனாய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” எனவும் குறிப்பிட்டுள்ளார்.