இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்ட அமைச்சரவை சந்திப்பு!

1591619512 president gotabaya rajapaksa
1591619512 president gotabaya rajapaksa

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக இடம்பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த சந்திப்பில் கலந்து கொண்டதுடன், ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் தமது அலுவலகங்களில் இருந்து கலந்து கொண்டனர்.

இதன் அடிப்படையில் காணொளி காட்சி மூலமான அமைச்சரவை சந்திப்பு வெற்றிகரமாக இடம்பெற்றதாக ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் நிலைமை மட்டுமல்லாது, செயற்றிறன், வசதி, நேரம் மற்றும் செலவைக் குறைத்தல் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு காணொளி காட்சி மூலமாக அமைச்சரவை சந்திப்பை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், சுபீட்சமான நோக்கு கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் புதிய தொழிநுட்ப பயன்பாட்டை மேம்படுத்துவது இதன் பிரதான நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இதனை மையமாகக் கொண்டே, தொழிநுட்ப அமைச்சு ஜனாதிபதிக்குக் கீழ் கொண்டுவரப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டிஜிட்டல் முறையிலான அரசாங்கத்தை விரிவுபடுத்துவதே தொழிநுட்ப அமைச்சின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.