ஆனந்தசங்கரி கோத்தாபயவிற்கு வாழ்த்து தெரிவிப்பு

aananthasngari 1
aananthasngari 1

இலங்கையின் 7வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்‌ஷவிற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனநாயக குடியரசின் ஜனாதிபதியாக தாங்கள் தெரிவுசெய்யப்பட்டமைக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

ஒரு சிலர், தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒரு கொடியின்கீழ் இணைத்துக்கொள்ள எடுத்துக் கொண்ட நடவடிக்கை வகுப்புவாதப் பாதையில் பிரச்சாரம் நகர்வதை உணர்ந்த நான் உங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளாமைக்கு மன்னிப்புக் கோரவேண்டிய அவசியமில்லை என கருதுகிறேன். நடந்தேறிய தேர்தல் நான் நினைத்தது சரியென நிரூபித்துக் காட்டியுள்ளது.

உள்ளூராட்சி மற்றும் பொதுத்தேர்தல்கள் மட்டுமன்றி சகல விடயங்களிலும் இனவாதம் தலைதூக்கிய போதெல்லாம் நான் வெறுப்படைந்திருந்தது – நீங்கள் அறியாததல்ல.

ஒரு குழுவினர் ஒன்றிணைந்து தாங்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் தமது கோரிக்கைகள் 13 இனை நிறைவேற்ற வேண்டுமெனக் கூறியிருந்தனர். அக்குழுவில் பலர் இருந்தபோதும் ஒரு அமைப்பைச் சேர்ந்தவர் கூட தம்முடன் இணையும்படி என்னிடம் கோரிக்கைவிடவில்லை. என்னுடன் தொடர்பு கொண்டு இணையுமாறு கோரிக்கை விடப்பட்டிருந்தால் நிச்சயமாக நான் அவர்களுடன் இணைந்திருக்க மாட்டேன்.

அவர்கள் முன்வைத்த 13 கோரிக்கைகளில் முதலாவதே சர்ச்சைக்குரிய இனப்பிரச்சனை பற்றியதாகும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எனது நிலைப்பாடு என்ன என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்!

இத்தீர்வை தாங்கள் ஜனாதிபதி பதவி வகிக்கின்ற காலத்திலேயே நிறைவேற்றுவீர்கள் என திடமாக நம்புகிறேன்.

இலங்கையின் ஜனாதிபதி பதவியில் தாங்கள் சிறப்புடன் செயற்பட்டு, நீடூழி காலம் வாழ வாழ்த்துகின்றேன்.