வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரிடம் வாக்குமூலம் பெற்ற காவல்துறையினர்!

128823763 10214343539061560 8607439375922624544 n 1
128823763 10214343539061560 8607439375922624544 n 1

வலி.கிழக்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை சீரமைக்க மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் அணியினர் அடிக்கல்லினை நட்டு ஆரம்ப நிகழ்வு செய்து வைத்த அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றியமை தொடர்பில் அவரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலானவர்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான ஊரெழு அம்மன் கோவில் வீதியை சீரமைக்கவுள்ளதாக அடிக்கல்லினை நட்டு வைத்தனர்.

இவ் வீதியை சீரமைக்க முகவராக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயரில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் உள்ளிட்டவர்களின் ஒளிப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டு திட்டப் பெயர்ப்பலகை நடப்பட்டது.

இந்த நிலையில் வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், தவிசாளருக்கு தகவல் வழங்கியமையினை அடுத்து, அனுமதிபெறப்படாது நடப்பட்ட குறித்த பெயர்ப்பலகையினை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குக் கடிதம் (தொலைநகல் வாயிலாகவும்) அனுப்பியிருந்தார்

ஒரு கடமை நாள் சென்ற பின்னரும் அவர்கள் அகற்றாத நிலையில் பிரதேச சபை ஒன்றிற்குச் சொந்தமான வீதியை மத்திய அரச நிறுவனமாக இருந்தால் என்ன எந்த நிறுவனமாக இருந்தால் என்ன எக் காரணம் கொண்டும் பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் சீரமைக்க முடியாது எனத் தெரிவித்து தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குறித்த பெயர்ப்பலகையினை அகற்றுமாறு பணித்திருந்தார்.

இதன்படி பிரதேச சபையினால் குறித்த அறிவிப்புப் பலகை எடுத்துவரப்பட்டு சபையில் வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அச்சுவேலி காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டினை அடுத்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரிடம் பிரதேச சபைக்கு வருகைதந்து அச்சுவேலி காவல் துறை பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்.

இதில் பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை சீரமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதேச சபையின் அனுமதியின்றி முயற்சித்தமை சட்டத்துக்குப் புறம்பானது எனவும் அதனாலேயே சபை ஒன்றிற்கு பகிரப்பட்ட அதிகாரத்தினை நிலைநாட்டுவதற்காகவே தாம் குறித்த திட்ட பெயர்ப்பலகையினை அகற்றியதாகவும் உரிய முறைப்படியான அனுமதி பெறப்பட்டால் அல்லது உரியவாறு அணுகினால் குறித்த பெயர்ப்பலகையை கையளிக்கத் தயார் எனவும் வலி.கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

மேலும், பிரதேச சபை என்பது அதிகார பகிர்விற்கான ஓர் இலகு என்ற அடிப்படையில் மத்திய அரசின் சட்டத்திற்கு புறம்பானதும் தேவையற்ற தலையீட்டையும் தாமும் தமது சபையும் ஏற்க முடியாது.

அபிவிருத்திக்கு நாம் தடை அல்ல. ஆனால் அதனை சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப பொறுப்புச்சொல்லும் பாங்குடன் மத்திய அரசாங்கத்தின் நிறுவனங்கள் செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்..

129279033 10214343540221589 434900090241235439 n
128823763 10214343539061560 8607439375922624544 n