எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ள கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள்!

2ce101f1d8945c007b219bccd417fa6e XL
2ce101f1d8945c007b219bccd417fa6e XL

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக வடக்கு மாகாணத்தில் தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மற்றும் காரைநகர் இந்துக் கல்லூரி என்பன எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதற்கான அறிவிப்பை மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளார்.

கிளிநொச்சியில் தொண்டமான் நகரைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கடந்த நவம்பர் 23ஆம் திகதி கண்டறியப்பட்டது. அவருக்கு ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக முன்னெடுக்கப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் போதே தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

அதனால் அவருக்கு தொற்று ஏற்படக் காரணம் மற்றும் அவருடன் தொடர்புடையோரைக் கண்டறியும் வகையில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் கடந்த நவம்பர் 24ஆம் திகதி தொடக்கம் தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டது.

கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 22ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் டிசெம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கு பாடசாலைகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, காரைநகரில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் கற்பிக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி நவம்பர் 30ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக மூடப்பட்டது. எனினும் ஆசிரியருக்கு கொரோனா தொற்று இல்லை என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் காரைநகர் இந்துக் கல்லூரியும் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.