கோத்தபாயவிற்கு நூறு நாள் அவகாசம்!

sivaji1 1
sivaji1 1

ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவிற்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாகவும் அதற்குள் தீர்வு காணப்படா விட்டால் சர்வதேச ரீதியாக வேண்டுகோள் விடுத்து பகிரங்க வாக்கெடுப்பினை நடாத்த கோருவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் மீது இனப்படுகொலைகளில் ஈடுபட்ட போர்க் குற்றத்தில் ஈடுபட்ட ஓர் போர் குற்றவாளியால் இனப் பிரச்சனைக்கு சரியான தீர்வு நீதி கிடைக்கும் வரை எம்மால் வாழ்த்துக் கூற முடியாது. முன்னாள் பாதுகாப்பு செயலரின் வெற்றிக்காக வாழ்த்துகளை கூறும் மன நிலையில் தமிழ் மக்கள் இல்லை. நானும் அந்த மன நிலையில் இல்லை.

ஓர் ஜனநாயக நாட்டிலே நாட்டின் ஜனாதிபதி ஆனதும் முதல் நூறு நாட்கள் வழங்கப்படும். அந்த நாட்காளில் அவருக்கு எதிரான பாரதுரமான போராட்டங்களோ, கருத்துக்களோ, விமர்சனங்களோ முன்வைக்கப்படுவதில்லை. ஆகவே தற்போது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவிற்கும் நூறு நாட்கள் நாம் வழங்குகின்றோம். நூறாவது நாள் முடிவதற்குள் தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

அதனை எடுக்கத் தவறினால் சர்வதேச ரீதியாக ஐநாவின் உதவியுடன் வடக்கு கிழக்கு பிராந்திய பகுதியில் பொதுசன வாக்கெடுப்பு நடத்துமாறு நாம் பகிரங்கமாக கோரி இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் அழுத்தங்களை கோருவோம். எந்த தடை வந்தாலும் சந்திக்க தயார். ஆகக் குறைந்தது இணைப்பாட்சி, சமஸ்டியை கொண்டதான தீர்வையாவது ஐக்கிய இலங்கைக்குள் வழங்க முன்வர வேண்டும்.

பௌத்த மதம் ஆழமாக வேர் ஊன்றிய இடத்தில் வைத்து புதிய ஜனாதிபதி தனது பதவியை ஏற்றுள்ளார். அனுராதபுரத்தில் துட்டகைமுனு நினைவுசின்னத்துக்கு முன்பாக பதவி ஏற்றுள்ளார். இதன் ஊடாக நவீன துட்டகைமுனுவாக மாறப் போகின்றாரா? அல்லது வாக்களித்தாலும் வாக்களிக்காது விட்டாலும் அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதியாக இருக்கப் போகின்றாரா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.