தென்னாபிரிக்காவின் புதிய முடக்க நிலை கிரிக்கெட் போட்டியைப் பாதிக்காது என அறிவிப்பு!

unnamed file 1 720x450 2
unnamed file 1 720x450 2

கொரோனா வைரஸூக்கு எதிராக போராடி வரும் தென்னாபிரிக்காவில் தற்சமயம் மூன்றாம் நிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவை சர்வதேச போட்டிகளைப் பாதிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்தும் இடம்பெறும் என தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

சர்வதேச டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளின் அங்கமாக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி தென்னாபிரிக்கா சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் சுப்பர் ஸ்போட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜெகனர்பேர்க்கில் எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கிடையில் தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முகமாக மூன்றாம் நிலைக் கட்டுப்பாடுகளை அந்த நாட்டு அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, பார்வையாளர்கள் இன்றி சர்வதேச போட்டிகள் இடம்பெறும் நிலையில், வீரர்கள் மற்றும் போட்டியுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மிக அவதானமாக கண்காணிக்கப்படுகின்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தடைப்படாது என்கிற செய்தியை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது.

இது குறித்து அச்சபை மேலும் தெரிவிக்கையில், ‘ஊடகவியலாளர்கள், வானொலி – தொலைக்காட்சிக்குழுவினர், பாதுகாப்பு அதிகாரிகள், அவசர மருத்துவ சேவையாளர்கள் மற்றும் தேவையான ஊழியர்கள் மட்டுமே தற்சமயம் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல, தேவையான வீரர்கள், போட்டி அதிகாரிகள், துணை ஊழியர்கள் மற்றும் மருத்துவ அணியினரே ஒவ்வொரு அணியுடனும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், அரசாங்கம் புதிதாக கொண்டு வந்திருக்கும் நடைமுறைகள் இந்த தொடருக்கு பொருந்தாது’ எனக்குறிப்பிட்டுள்ளது.