இரண்டாவது டெஸ்டிலும் இலங்கை அணி தோல்வி!

Untitled design 2021 01 05T091159.335 720x450 1
Untitled design 2021 01 05T091159.335 720x450 1

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கை அணியை வயிட் வோஷ் செய்துள்ளது.

ஜோகனஸ்பர்க் மைதானத்தில் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸிற்காக 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குசல் பெரேரா 60 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், நோட்ஜே 6 விக்கெட்டுகளையும் முல்டர் 3 விக்கெட்டுகளையும் சிபம்லா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 302 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக டீன் எல்கர் 127 ஓட்டங்களையும் வெண்டர் டஸன் 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில், விஷ்வ பெனார்டோ 5 விக்கெட்டுகளையும் அசித்த பெனார்டோ மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சமீர 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

145 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 211 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இதன்போது இலங்கை அணி சார்பில் அதிகப்பட்ச ஓட்டங்களாக திமுத் கருணாரத்ன 103 ஓட்டங்களையும் டிக்வெல்ல 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், லுங்கி ங்கிடி 4 விக்கெட்டுகளையும் சிபம்லா 3 விக்கெட்டுகளையும் நோட்ஜே 2 விக்கெட்டுகளையும் முல்டர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தென்னாபிரிக்கா அணிக்கு 67 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது.

இதன்போது ஹெய்டன் மார்கிரம் 36 ஓட்டங்களுடனும் டீன் எல்கர் 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்திருந்த இலங்கை அணி, இம்முறை அவமானத் தோல்வியுடன் நாடு திரும்புகின்றது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டீன் எல்கர் தெரிவுசெய்யப்பட்டார்.