இரு பங்களாதேஷ் வீரர்களுக்கு ஒரு வருட தடை

arafath sunny
arafath sunny

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சஹாடட் ஹுசைனுக்கு இரண்டு வருட இடைக்காலத் தடையுடன் கூடிய 5 வருட தடையினை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) வழங்கியுள்ளது.

பங்களாதேஷில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான நெஷனல் கிரிக்கெட் லீக்கின் டாக்கா டிவிஷன் மற்றும் குல்னா டிவிஷன் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது தங்களுடைய அணியின் சக வீரரான அரபாத் சன்னியை தாக்கிய குற்றச்சாட்டுக்காக சஹாடட் ஹுசைனுக்கு இந்த தடை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணையை போட்டி மத்தியஸ்தர் மேற்கொண்ட போது, தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட சஹாடட் ஹுசைனிற்கு 5 வருட தடை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பங்களாதேஷ் அணியின் வீரர் சஹாடட் ஹுசைனை தாக்குதலுக்கு தூண்டிய காரணத்துக்காக அரபாத் சன்னி மற்றும் மொஹமட் சஹிட் ஆகியோருக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஒரு வருட தடை விதித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில், அரபாத் சன்னி மற்றும் மொஹமட் சஹிட் ஆகியோர் சஹாடட் ஹுசைனை தாக்குதலுக்கு தூண்டியமை தெரியவந்துள்ள காரணத்தால் இருவருக்கும் தலா ஒவ்வொரு வருடம் தடை வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இவர்களுக்கான தடை உடனடியாக வழங்கப்படவில்லை. அரபாத் சன்னி மற்றும் மொஹமட் சஹிட் ஆகியோரின் மைதானத்துக்குள் மற்றும் மைதானத்துக்கு வெளியிலான நடவடிக்கைகளை அவதானித்து, இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்கும் பட்சத்தில் உடனடியாக இந்த தடை அமுலுக்கு வரும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது.