ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் வெற்றி!

novak djokovic wins 2020 aussie open 1400 gettyimages 1203545004
novak djokovic wins 2020 aussie open 1400 gettyimages 1203545004

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 64-ம் நிலை வீரரான 23 வயது பிரான்சஸ் டிபோவை (அமெரிக்கா) சந்தித்தார்.

3½ மணி நேரம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பிரான்சஸ் டிபோ 2-வது செட்டை தனதாக்கியதுடன், அடுத்த செட்டில் டைபிரேக்கர் வரை கடும் சவால் அளித்தார். முடிவில் ஜோகோவிச் 6-3, 6-7 (3-7), 7-6 (7-2), 6-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

வெற்றிக்கு பிறகு ஜோகோவிச் கூறுகையில், ‘மிகவும் கடுமையான சவால் அளித்த டிபோவை பாராட்ட விரும்புகிறேன். அவரது ஆட்டம் அருமையாக இருந்தது. அவர் எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டார். வெப்பம் காரணமாக ஆடுவதற்கு கடினமாக இருந்தது. நான் இதுபோன்ற சூழ்நிலையை சந்திப்பது முதல்முறையல்ல. எனவே இதுபோன்ற நிலையை எப்படி கையாள வேண்டும் என்பது எனக்கு தெரியும்’ என்றார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-பென் மெக்லாச்லன் (ஜப்பான்) ஜோடி 4-6, 6-7 (0-7)என்ற செட் கணக்கில் ‘வைல்டு கார்டு’ மூலம் வாய்ப்பு பெற்ற தென்கொரியாவின் ஜி சுங் நாம்-மின் கு சாங் இணையிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தது.