குசல் பெரேரா 14 ஆவது ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை!

Kusal Perera
Kusal Perera

14 ஆவது ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தின் முதற் சுற்றில் இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான குசல் பெரேரா எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இன்று (18.02.2021) பிற்பகல் 03.00 மணிக்கு சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆரம்பமான ஏலத்தில் இலங்கை வீரரான குசல் ஜனித் பெரேரா தனது அடிப்படை விலையான 50 இலட்சம் இந்திய ரூபாவுக்கு எடுத்துக்கொள்ள எந்த அணியும் முன்வரவில்லை.

இலங்கை கிரிக்கெட் அணி அண்மையில் நடத்திய உடற்தகுதி பரிசோதனையில் குசல் ஜனித் பெரேரா தவறியிருந்தமை நினைவு கூரத்தக்கது.

இம்முறை ஐ.பி.எல். ஏலப்பட்டியில் குசல் பெரேராவைத் தவிர, திசர பெரேரா, இசுரு உதான, வனிந்து ஹசரங்க, கெவின் கொத்தகொட, விஜயகாந்த் வியாஸ்காந்த், மஹீஷ் தீக்சன இலங்கையர்களும் அடங்குகின்றனர். இதில் கெவின் கொத்தகொட, விஜயகாந்த் வியாஸ்காந்த், மஹீஷ் தீக்சன ஆகிய மூவரும் இலங்கை கிரிக்கெட் அணியில் சர்வதேச அறிமுகத்தை பெறாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.