4×100 அஞ்சலோட்டத்தில் இலங்கைக்கு இரட்டைத் தங்கம்

4x100
4x100

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் கிடைக்கப்பெற்றுள்ளது.

ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்ட இறுதிப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை அணி, 39.14 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து, புதிய தெற்காசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டது.

இதேநேரம், ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் 39.97 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தையும், பாகிஸ்தான் அணி (40.5 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டது.

பெண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் லக்ஷிகா சுகன்தி தலைமையிலான இளம் பெண்கள் அணி தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியது. போட்டியை நிறைவுசெய்ய 44.89 செக்கன்களை எடுத்துக் கொண்டனர்.

பெண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் 45.36 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தையும், பாகிஸ்தான் அணி (46.74 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டது.