தேசிய குழாத்தில் அங்கம் வகிக்கும் வீர, வீராங்கனைகளுக்கு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா தீர்மானம்!

f98ed50e sports 2
f98ed50e sports 2

2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா மற்றும் பொதுநலவாய விளையாட்டு விழா ஆகியவற்றை மையப்படுத்தி தேசிய குழாத்தில் அங்கம் வகிக்கும் வீர, வீராங்கனைகளுக்கு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் யோசனைக்கமைய செயற்படுத்தபடவுள்ள இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக வீர, வீராங்கனைகளை தொழிற்சார் ரீதியில் தயார்படுத்தி, அவர்களை சர்வதேச தரத்தில் பதக்கங்களை வென்றெடுக்கச் செய்வதே பிரதான நோக்கமாகும்.

அந்தவகையில், மெய்வல்லுநர், பளுதூக்கல்,குத்துச் சண்டை, ஜூடோ, நீச்சல், பெட்மின்டன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பரா போட்டிகளிலிருந்து 60 பேருக்கு மாதாந்த கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது.

போட்டியாளர்கள், தங்களை மேலும் திறம்பட வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி நடவடிக்கைகளுக்காகவே இந்த ஒரு இலட்சம் ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதுடன், போஷாக்கு மட்டத்தை அதிகரித்துக்கொள்வதற்காக போஷாக்கு கொடுப்பனவாக 25 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.