99 ஓட்டங்களினால் மே.இ.தீவுகள் அணி முன்னிலை

ExHek14WUAUMVyr
ExHek14WUAUMVyr

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியானது இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 99 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.

இலங்கை மற்றும் மேற்கிந்திந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, தற்சமயம் ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணித் தலைவர் கிரெய்க் பிராத்வைட் முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இலங்கை அணியை பணித்தார்.

அதன் பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 69.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

லஹிரு திரிமான்ன 70 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 32 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற, அணியின் ஏனைய வீரர்கள் சொர்ப்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டுகளையும், கெமர் ரோச் 3 விக்கெட்டுகளையும் மற்றும் ராகீம் கார்ன்வால் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்கள்.

அதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியானது முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கிரெய்க் பிராத்வைட் 3 ஓட்டத்துடனும், ஜோன் காம்ப்பெல் 7 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் நேற்றிரவு ஆரம்பமான போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 101 ஓவர்களை எதிர்கொண்டு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 268 ஓட்டங்களை குவித்துள்ளது.

அணி சார்பில் அதிகபடியாக ஜோன் காம்ப்பெல் 42 ஓட்டங்களையும், கைல் மேயர்ஸ் 45 ஓட்டங்களையும், ஜோசுவா த சில்வா 46 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க ராகீம் கார்ன்வால் 60 ஓட்டங்களுடனும் கேமர் ரோச் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

பந்து வீச்சில் சுரங்க லக்மால் 5 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சாமர 2 விக்கெட்டுகளையும், லசித் எம்புல்தெனிய ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் 99 ஓட்டங்களினால் மேற்கிந்தியத்தீவுகள் அணியானது முன்னிலையில் இருக்க இன்றிரவு போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமாகும்.