ஜப்பானில் ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம் இன்று ஆரம்பம்!

ExSeTPeU4AAr1P8 1
ExSeTPeU4AAr1P8 1

கொரோனா அச்சுறுத்தலால் ஓராண்டுக்கு பிற்போடப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதையொட்டி ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்ட நிகழ்ச்சி ஜப்பானின் வடகிழக்கு நகரமான புகுஷிமாவில் உள்ள ஜே-விலேஜ் விளையாட்டு வளாகத்தில் இன்று ஆரம்பமானது.

2011 ஆம் ஆண்டு பெண்கள் உலக கிண்ண கால்பந்து போட்டியில் ஜப்பான் அணி மகுடம் சூடியபோது, அந்த அணிக்கு பயிற்சி அளித்த நோரியோ சசாகி முதல் நபராக ரோஜா-தங்கம், செர்ரி மலரின் வடிவத்திலான ஒலிம்பிக் தீபத்தை எரியச் செய்தார்.

இது 2011 அணுசக்தி பேரழிவிற்கு பதிலளிக்கும் நடவடிக்கைகளுக்கான தளமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது

இந் நிகழ்வில் உரையாற்றிய 2020 டோக்கியோ ஒலிம்பிக் தலைவர் சீகோ ஹாஷிமோடோ, ஒலிம்பிக் சுடர் “இருளின் முடிவில் ஒளியின் கதிராக” செயல்படும் என்று நம்புவதாகக் கூறினார்.

அத்துடன் ஒலிம்பிக் சுடரின் பயணத்தின் ஆரம்பம் நம்பிக்கையின் அடையாளம் என்று கூறியுள்ளார்.

ஜப்பான் முழுவதும் 47 மாகாணங்களுக்கு மொத்தம் 121 நாட்கள் இந்த தீபம் பயணிக்கிறது. இதை 10 ஆயிரம் பேர் தொடர் ஓட்டமாக எடுத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக தீப ஓட்டம் பெருத்த ஆர்ப்பரிப்புடன் வெகுவிமர்சையாக நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே தொடர் ஓட்ட நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதுவும் சமூக இடைவெளி, கட்டாயம் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.