இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கைக்கு 136 ஓட்டம்

ExvWOnSVIAcIg s
ExvWOnSVIAcIg s

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை பெற்றுள்ளது.

சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்குமிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியானது சமனிலையில் நிறைவுபெற, இரண்டாவது போட்டி மார்ச் 29 ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை மேற்கிந்தியத்தீவுகளுக்கு வழங்கியது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் 86 ஓவர்களை எதிர்கொண்டு 7 விக்கெட்டுகளை இழந்து 287 ஓட்டங்களை பெற்றது.

ஆரம்ப வீரராக களமிறங்கிய அணித் தலைவர் கிரெய்க் பிராத்வைட் 99 ஓட்டங்களுடனும், 8 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ராகீம் கார்ன்வால் 43 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் நேற்றைய தினம் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பிக்க, இன்னிங்ஸை வழிநடத்திய பிராத்வைட் தனது ஒன்பதாவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்து 126 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனிடையே ரக்கீம் கார்ன்வால் தனது டெஸ்ட் வாழ்க்கையின் இரண்டாவது அரை சதத்தை நேற்யை தினம் பூர்த்தி செய்து 73 ஓட்டங்களுடன் சுரங்க லக்மாலின் பந்து ஆட்டமிழந்தார்.

இறுதியாக மேற்கிந்தியத்தீவுகள் 111.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 354 ஓட்டங்கள‍ை பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் இலங்கை சார்பில் சுரங்க லக்மால் 4 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சாமர 3 விக்கெட்டுகளையும், விஷ்வ பெர்னாண்டோ, லசிம் எம்புல்தெனிய மற்றும் தனஞ்சய டிசில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது இலங்கை.

ஆரம்ப வீரர்களாக அணித் தலைவர் திமுத் கருணாரத்ன, லஹிரு திரிமான்ன ஆகியோர் களமிறங்க, முதல் விக்கெட் 18 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

அதன்படி திமுத் கருணாரத்ன ஒரு ஓட்டத்துடன் அல்சாரி ஜோசப்பின் பந்து வீச்சில் போன்னரிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

2 ஆவது விக்கெட்டுக்காக ஓசத பெர்னாண்டோ – திரிமான்ன இருவரும் ஜோடி சேர்ந்தாட இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 50 ஓட்டங்களை கடந்தது.

இந் நிலையில் ஓசத பெர்னாண்டோ 18 ஓட்டங்களுடன் மேயர்ஸின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்க, லஹிரு திரமான்னவும் 55 ஓட்டங்களுடன் கேமர் ரோச்சின் பந்து வீச்சில் வீழ்த்தப்பட்டார்.

அதனால் இலங்கை அணி 77 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

நான்காவது விக்கெட்டுக்காக தினேஷ் சந்திமால் மற்றும் தனஞ்சய டிசில்வா ஆகியோர் ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாடிவர இரண்டாம் நாள் ஆட்டமும் நிறைவுக்கு வந்தது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 61 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நிலையில் 136 ஓட்டங்களை குவித்துள்ளது.

தினேஷ் சந்திமால் 34 ஓட்டங்களுடனும், தனஞ்சய டிசில்வா 23 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.