ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி

Rajasthan Royals vs Punjab Kings IPL 20215
Rajasthan Royals vs Punjab Kings IPL 20215

ராஜஸ்தான் அணித் தலைவர் சஞ்சு சாம்சன் பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடி சதமடித்த போதும் இறுதியில், பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். 4 ஆவது லீக் ஆட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

மயங்க் அகர்வால் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கிறிஸ் கெய்ல் 28 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த தீபக் ஹூடா அதிரடியாக ஆட 28 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 3 ஆவது விக்கெட்டுக்கு 105 ஓட்டங்களை குவித்தது.

பொறுப்புடன் ஆடிய கே.எல். ராகுல் இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 50 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 91 ஓட்டங்களை குவித்தார்..

இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்களை குவித்தது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் சார்பில் சேத்தன் சகாரியா 3 விக்கெட்டுகளையும் கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 222 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களமிறங்கியது. பென் ஸ்டோக்ஸும், மனன் வோராவும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

முதல் ஓவரின் 3 ஆவது பந்தில் பென் ஸ்டோக்ஸ் டக் அவுட்டானார். மனன் வோரா 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய அணித் தலைவர் சஞ்சு சாம்சன் பொறுப்புடன் ஆடினார். ஜோஸ் பட்லர், ஷிவம் டூபே ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தனர். பட்லர் 25 ஓட்டங்களுடனும் ஷிவம் டூபே 23 ஓட்டங்களுடனும் வெளியேறினர். ரியான் பராக் 11 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் தனியாளாக போராடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முயன்றார். இறுதி ஓவரில் வெற்றிக்கு தேவையான ஓட்டங்களை எடுக்க ராஜஸ்தான் ரோயல்ஸ் திணறியது.

இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. அணித் தலைவர் சஞ்சு சாம்சன் 119 ஓட்டங்களுடன் இறுதி பந்தில் ஆட்டமிழந்ததால் அந்த அணியின் வெற்றி பறிபோனது. இதனால் பஞ்சாப் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.