பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் டொமினிக் தீம் அதிர்ச்சி தோல்வி!

image 2021 05 31 234518
image 2021 05 31 234518

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நேற்று தொடங்கியது. களிமண் தரைப் போட்டியான இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவரும், பிரெஞ்சு ஓபனில் 2 முறை இறுதிப்போட்டி வரை முன்னேறியவருமான டொமினிக் தீம் (ஆஸ்திரியா), 68-ம் நிலை வீரரான பாப்லோ அந்துஜாரை (ஸ்பெயின்) எதிர்கொண்டார்.

அனுபவம் வாய்ந்த டொமினிக் தீம் முதல் இரு செட்டுகளை கைப்பற்றிய நிலையில் எஞ்சிய 3 செட்டுகளை வரிசையாக பறிகொடுத்து அதிர்ந்து போனார்.

சுமார் 4 மணி 28 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 35 வயதான பாப்லோ அந்துஜார் 4-6, 5-7, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் டொமினிக் தீமை வெளியேற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

கிராண்ட்ஸ்லாம் ஆட்டம் ஒன்றில் டொமினிக் முதல் 2 செட்டை வென்று அதன் பிறகு சறுக்குவது இது 2-வது முறையாகும். அத்துடன் 8-வது முறையாக பிரெஞ்சு ஓபனில் பங்கேற்ற அவர் முதல் சுற்றுடன் வெளியேறுவது இதுவே முதல் தடவையாகும்.