முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தது – மிரட்டும் பந்துவீச்சாளர்கள்!

1622948199 Jamieson Root 2
1622948199 Jamieson Root 2

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் திணறி வருகிறது. இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2 ஆம் திகதி தொடங்கியது. நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 378 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்கத்தில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் மற்றும் தலைவர் ஜோ ரூட் பாட்னர்ஷிப் அமைத்தனர். 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பர்ன்ஸ் அரைசதம் அடித்து 59 ஓட்டங்களுடனும், ரூட் 42 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

3 ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 4 ஆம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே கைல் ஜேமிசன் வேகத்தில் ரூட் (42) ஆட்டமிழந்தார். இதன்பிறகு, டிம் சௌதி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். ஆலி போப் 22 ஓட்டங்களுக்கு டிம் சௌதி வேகத்தில் வீழ்ந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய டேனியல் லாரன்ஸ் மற்றும் ஜேம்ஸ் பிரேசி ஓட்டம் ஏதும் எடுக்காமல் சௌதியிடம் வீழ்ந்தனர்.

இதனால், அந்த அணி 140 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதை அடுத்து, பர்ன்ஸ் மற்றும் ஆலி ராபின்சன் நிதானம் காட்டத் தொடங்கினர். 4 ஆம் நாள் உணவு இடைவேளை வரை இந்த இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. 4 ஆம் நாள் உணவு இடைவேளையில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்துள்ளது. பர்ன்ஸ் 72 ஓட்டங்களுடனும், ராபின்சன் 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.