லெபனான் அணிக்கெதிரான கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தோல்வி

SLF 1
SLF 1

லெபனான் அணிக்கெதிரான கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி 2க்கு 3 என்ற கோல் கணக்கில் கெளரவமான தோல்வியைத் தழுவியது.

2022 இல் கத்தாரில் ந‍டைபெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கான ஆசிய வலய தகுதி காண் போட்டியின் எச் குழுவில் அங்கம் வகிக்கும் அணிகளுக்கான போட்டிகள் தென் ‍கொரியாவில் நடைபெற்று வருகிறது.

பீபா தரவரிசையில் 93 ஆவது இடத்திலுள்ள லெபனான் அணியை 205 ஆவது இடத்திலுள்ள இலங்கை அணி இன்றைய தினம் எதிர்கொண்டது. சியோல் நகரிலுள்ள கொயாங் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ‍லெபனான் அணி 3 கோல்களைப் போட்டதுடன், இலங்கை அணி 2 கோல்களை அடித்து அசத்தியிருந்த‍மை பெரு வெற்றியாகும்.

போட்டியின் ஆரம்பமான 10 ஆவது நிமிடத்தில் இலங்கை அணியின் உப தலைவரான கவிந்து இஷான் பரிமாறிய பந்தை இலங்கை அணியின் மற்றொரு உப தலைவரான வசீம் ராசிக் கோல் அடிக்க இலங்கை அணிக்கு புத்தெழுச்சியும் நம்பிக்கையும் கிடைத்தது.

எனினும், அடுத்த நிமிடத்திலேயே (11 ஆவது) ‍ லெபனான் அணியின் ஜோஹன்ஒஹுமாரி கோல் அடித்து கோல் கணக்கை சமப்படுத்தினார். அதையடுத்து 17 ஆவது நிமிடத்தில் மொஹமட் காடோஹ்கோலொன்றை அடிக்க லெபனான் அணி முன்னிலை பெற்றது.

பந்துப் பரிமாற்றத்தை தன்பக்கம் வைத்துக்கொண்ட லெபனான் அணி இடைவேளை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தவே‍ளையில் ‍ (44 ஆவது நிமிடம் ) ஜோஹன் ஒஹுமாரி மீண்டுமொரு கோலோன்றை போட்டு அசத்தினார்.

இடைவேளையின் போது 3க்கு 1 என்ற கோல் கணக்கில் லெபனான் அணி முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து இலங்கை சற்று வேகத்தை அதிகரித்து பந்து பரிமாற்றங்களை செய்யவே, லெபனான் அணியினர் சற்று தடுமாற்றமடைந்தனர். இதன் பலனாக போட்டியின் 61 ஆவது நிமிடத்தில் கிடைத்த தண்ட உதையை (பெனால்டி கிக்) கோலாக்கினார் வசீம் ராசிக். இரண்டாவது கோலடித்த புத்துணர்ச்சியுடன் விளையாடியிருந்தபோதிலும் லெபனான் அணியினர் மேலும் ஒரு கோலை வழங்காதிருப்பதற்காக தற்காப்பு ஆட்டத்தில் இறங்கினர்.

எனினும், கடைசி 10 நிமிடங்களில் சற்று சோர்வடைந்த இலங்கை அணியினர் மேலும் ஒரு கோல் போட முடியாது போகவே 2க்கு 3 என் கோல் கணக்கில் தோல்வியைத் தழுவினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து கழக வீரர்களான இலங்கை குடியுரிமையைக் கொண்ட மேர்வின் ஹெமில்டன், டிலான் செனத் டி சில்வா இருவரும் கோல் ஒன்றைக் கூட அடிக்காதமை இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையளித்தது. எனினும், இலங்கை அணித்தலைவரும் கோல்காப்பாளருமான சுஜான் பெரேரா லெபனான் அணியினர் கோல் வலை நோக்கி அடித்த பந்துகளை அலாதியாக தடுத்திருந்தமை கவனிக்கத்தக்க விடயமாகும்.

இறுதிக் கட்டத்தில் இலங்கை அணியினர் சற்று வேகமாக பந்தை கடத்தியிருந்தால் மேலும் ஒரு கோலை அடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பதுடன், போட்டி‍யை சமநிலையில் முடித்திருக்கலாம் என கால்பந்தாட்ட அவதானிகள் கருதுகின்றனர்.